ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர். மேலும் இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதானந்தம், முகேஷ், அசோக்குமார் ஆகிய 3 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுக்களை விசாரித்த டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி சுதீர் குமார் சிரோகி, அவர்களுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கட்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த பிணைத்தொகையையும், அதற்கு இணையான இரு பிணையதாரரின் பிணையையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.