24 ஆண்டுகள் தேசத்திற்கு அர்ப்பணிப்பு; கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மாற்றியவர்: பிரதமர் மோடிக்கு அமித்ஷா புகழாரம்

கர்ம யோகி ஒருவர் பொதுமக்கள் சேவையாற்றிட தன் வாழ்வை அர்ப்பணித்த இந்த நாள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் மிக முக்கியம் வாய்ந்த நாள் என பிரதமர் மோடிக்கு அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக 2014-ம் ஆண்டு முதல் மோடி பதவி வகித்து வருகிறார். தேசிய அளவிலான தேர்தலில் அடுத்தடுத்து 3 முறை வெற்றி பெற்றதுடன், குஜராத் சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார்.
அவர் 24 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் முதன்முறையாக குஜராத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிரதமர் மோடிக்கு எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் வெளியிட்ட செய்தியில், தேசம் மற்றும் பொதுமக்கள் சேவைக்காக பிரதமர் மோடி 24 ஆண்டுகளை அர்ப்பணித்து உள்ளார். தன்னலமற்ற மனவுறுதியுடன் பொதுமக்கள் சேவையாற்றிட கர்ம யோகி ஒருவர் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்து கொண்ட இந்த நாள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
பொதுமக்களுக்கு ஏற்பட கூடிய பிரச்சினைகளை தன்னுடைய சொந்த பிரச்சினைகளாக எடுத்து கொண்டு அவற்றுக்கு தீர்வு காண தொடங்கினார். பின்னர் அவை வரலாறாக மாறின என பதிவிட்டு உள்ளார்.
இந்த 24 ஆண்டுகளில் குஜராத்தில் விவசாயிகள், பெண்கள், தொழில் மற்றும் கல்வியில் மாற்றம் கொண்டு வருவதில் அல்லது நாட்டின் பாதுகாப்பு, ஏழைகளின் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி சமூகங்கள் உள்பட அனைத்து பிரிவினரையும் மேம்படுத்துவதிலும், பிரதமராக தேசமே முதலில் என்ற தொலைநோக்கு பார்வையுடனும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற திட்டத்துடனும், ஒரு தலைமையானது எப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர முடியும் என மோடி நிரூபித்து உள்ளார்.
அவர் ஒருபோதும் தேர்தலில் தோல்வியையே சந்தித்தது கிடையாது. பன்னிரண்டரை ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்தது உள்பட அனைத்து பிரதமர்களையும் விட நீண்டகாலம் அரசின் தலைமை பொறுப்பை வகித்து வருபவர் என்ற சாதனையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.






