ரூ.7,409 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது: ரிசர்வ் வங்கி


ரூ.7,409 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது: ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 1 Aug 2024 1:50 PM GMT (Updated: 2 Aug 2024 1:20 AM GMT)

97.92 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2016 நவம்பர் மாதம், நாட்டில் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.

இதில் 500 ரூபாய் நோட்டுகள் தற்போது வரை மக்களிடையே சகஜமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு மே 19, 2023 அன்று, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பிற நோட்டுகளை மாற்றிக் கொள்ளுமாறும் அல்லது தங்களுடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யுமாறும் மக்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து மக்கள் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துவந்தனர்.

இந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறித்த தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 97.92 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்துவந்த 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் ஜூலை 31, 2024-ன் படி 7,409 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Next Story