காதலனுக்கு எமனான காதலி... கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்
கொலை வழக்கு தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர்கள் இருவரும் காதலர்கள். இந்தநிலையில் கிரீஷ்மா, காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து கைது செய்யப்பட்டார். கிரீஷ்மாவுக்குப் பூச்சி மருந்து வாங்கி கொடுத்ததாக அவரது மாமா நிர்மல்குமாரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா உள்ளிட்ட அனைவரும் ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர். காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர், நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "ஷாரோன் ராஜிக்கு கொடுக்கப்பட்ட விஷம் 15 மில்லி உடலுக்குள் சென்றாலே மரணம் நிச்சயம். அந்த விஷத்தை முறித்து காப்பாற்றும் மருந்து இல்லை" என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷாரோன் ராஜிக்கு விஷம் கொடுப்பதற்கு முன்பு, காலையில் 7.30 மணிக்கு அந்த விஷம் உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படும் என கிரீஷ்மா இணையதளத்தில் தேடியதாக டிஜிட்டல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விஷத்தின் தன்மையை தெரிந்துகொண்டுதான் கிரீஷ்மா அன்று காலை 10.30 மணியளவில் ஷாரோன் ராஜிக்கு அதைக் கொடுத்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.