ரெயில் விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் 13 பேர் உயிரிழந்த சோகம்: நிவாரணம் அறிவித்த அரசு


ரெயில் விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் 13 பேர் உயிரிழந்த சோகம்: நிவாரணம் அறிவித்த அரசு
x

Image Courtacy: PTI

தீப்பிடித்ததாக கருதி ரெயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள், மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் நேற்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் 'புஷ்பக்' ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மகேஜி மற்றும் பர்தாடே ரெயில் நிலையங்களுக்கு இடையே நின்ற ரெயிலில் இருந்து உயிர் பயத்தின் காரணமாக பயணிகள் பலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பயணிகள், தண்டவாளத்தை கடந்துவிட முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரெயில், தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது மோதிச் சென்றது. விபரீதமாக நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்களில் சிலரது உடல்கள் சிதறி நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டன. சிலர் ரெயில் சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். இதனால் அந்த இடமே ரத்த சகதியாக மாறியது.

நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த விபத்தில் சிக்கி 13 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் மும்பையில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் நடந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மராட்டிய அரசு சார்பில் மந்திரி கிரிஷ் மகாஜன் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஜல்காவ் மாவட்ட கலெக்டரும் அங்கு விரைந்தார். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தண்டவாளத்தில் துண்டிக்கப்பட்ட தலைகளும், உடல்களும் சிதறி கிடந்த காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. புஷ்பக் ரெயில் பயணிகள் மற்றும் அங்கு கூடிய மக்கள், அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "காயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருக்குமாறு அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

1 More update

Next Story