பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்


பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 4 Jun 2025 8:01 PM IST (Updated: 4 Jun 2025 8:14 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.18 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு அணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக கர்நாடக பேரவை மாளிகை முதல் சின்னசாமி மைதானம் வரை பெங்களூரு அணி வீரர்களின் பேருந்து பேரணி நடத்தப்பட்டது.

பெங்களூரு அணியை வரவேற்க மைதானத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனிடையே, சின்னசாமி மைதானத்தின் 6-வது கேட் பகுதியில் அத்துமீறி பலர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story