நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம்


நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Jun 2024 10:29 PM GMT (Updated: 6 Jun 2024 10:33 PM GMT)

கடந்த 2 முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத காங்கிரஸ், இந்த முறை வலிமையான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்தன.கடந்த 2019-ம் ஆண்டு வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் எழுச்சி பெற்றிருக்கிறது. குறிப்பாக கடந்த 2 முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத காங்கிரஸ், இந்த முறை வலிமையான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.

காங்கிரஸ் அங்கம் வகித்த இந்தியா கூட்டணியும் 230-க்கு மேற்பட்ட தொகுதிகளை பெற்று சாதித்து உள்ளது. முந்தைய 2 தேர்தல்களில் கிடைத்த தோல்வியால் துவண்டு போன காங்கிரசாருக்கு இது மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் காரியக்கமிட்டி நாளை (சனிக்கிழமை) டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காரியக்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.

குறிப்பாக கட்சி சாதித்த இடங்கள், சறுக்கிய பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் புதிய ஆட்சியில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் மற்றும் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.


Next Story