குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பா? - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9-ந் தேதி நடைபெற்றது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் உள்ள 6 ஆயிரத்து 244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.
இதற்கான போட்டித்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெற்றது. தேர்வை, 15 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இதற்கிடையில், 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் போட்டியிடும் நிலையில், காலி இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு குரூப்-4 பணிகளுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8 ஆயிரத்து 932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு 4 ஆயிரத்து 466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக, குரூப்-4 தேர்வு மூலம் காலிப்பணியிடங்கள். 2 ஆயிரத்து 172 இடங்கள் கூடுதலாக நிரப்பப்பட உள்ளன. எனவே, சமூகவலைத் தளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.