நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- மத்திய அரசு ஏற்பாடு
இணையதளம் வாயிலாக நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சியை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை,
நமது நாட்டில் எம்பிபிஎஸ் உட்பட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் சேரவும் ஜேஇஇ, கிளாட் போன்ற தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மாணவர்கள் தொடர் பயிற்சி பெற வேண்டிய நிலையுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் பணிகளை மத்திய கல்வி அமைச்சகமும் முன்னெடுத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இதற்கென்று தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
''சதீ'' என்ற பெயரில் இந்த இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து பயிற்சி வாயிலாக பயன் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கியூட் நுழைவுத் தேர்வு, எஸ்.எஸ்.சி., வங்கி, ஐ.சி.ஏ.ஆர். போன்ற தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, https://sathee.prutor.ai/ என்ற இணையதளத்துக்கு சென்று எந்த தேர்வுகளுக்கு தயாராக வேண்டுமோ? அதற்கு முன்பதிவு செய்து, இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்.