அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு


அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
x

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர வரும் 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் அக்னிவீர் என்ற திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவ அதிகாரிகள் அல்லாத படைவீரர்களை ஆயுதப்படையில் சேர்த்துக் கொள்வதற்காக இந்தியப் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்திய திட்டமே அக்னிவீர் திட்டமாகும்.

இந்த அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆண்டுக்கு 2 முறை நடைபெறும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ராணவ வீரர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். அதற்காக இவர்களுக்கு 6 மாத பயிற்சி வழங்கப்படும்.

அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு கடந்த மார்ச் 12-ந் தேதி தொடங்கி கடந்த 10-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பதிவு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் வருகிற 25-ந்தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு கட்டணம் ரூ.250 ஆகும். இதனை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யூ.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

ஆட்சேர்ப்பு ஆன்லைன் மூலம் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.) உடல் தகுதி மற்றும் மருத்துவத் தேர்வுகள் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான தகுதி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை வேட்பாளர்கள் படித்துப்பார்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) மற்றும் 044-25674924 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story