மின்சார பில் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: கூகுள் பே முடிவால் பயனர்கள் அதிர்ச்சி

யுபிஐ பண பரிவர்த்தனைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் வருவாயை ஈட்டும் நோக்கில் புதிய நடவடிக்கையை கூகுள் பே எடுத்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இதில், கூகுள் பே, போன் பே, பே டி.எம்., ஆகிய செயலிகளை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். துவக்கத்தில் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டு வந்த சேவை தற்போது படிப்படியாக கட்டணம் ஆகி வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு மொபைல் ரீசார்ஜுகளுக்கு கூகுள் பே கட்டணம் வசூலிக்க தொடங்கியது.இதை வசதி கட்டணம்(Convenience Fee) என கூகுள் பே வசூலித்து வருகிறது.
எனினும் மின்சார கட்டணம் மற்றும் கேஸ் புக்கிங் செய்ய எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே இப்போது கூகுள் நிறுவனம் இதற்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது நீங்கள் யுபிஐ மூலம் இதற்குக் கட்டணம் செலுத்தினால் இன்னும் இலவசம் தான். அதேநேரம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனை தொகையின் மதிப்பில் 0.5% முதல் 1% வரை இந்தக் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. கூகுள் பேயின் இந்த முடிவு பயனர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.