அசாமில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
ரெயில் என்ஜின் உட்பட மொத்தம் 8 பெட்டிகள் தடம் புரண்டன.
திஸ்பூர்,
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மும்பைக்கு லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (ரெயில் வண்டி எண் 12580) இயக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை 7 மணியளவில் அகர்தலாவில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டது.
அசாமில் உள்ள திபாலாங் ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பிற்பகல் 3:55 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயில் என்ஜின் உட்பட மொத்தம் 8 பெட்டிகள் தடம் புரண்டன.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், மீட்பு குழுவினருடன் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவித்துள்ள ரெயில்வே அதிகாரிகள், மறுசீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இந்த விபத்தால், அவ்வழியாக செல்லும் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து தெரிந்துகொள்ள அவசர உதவி எண்களை 03674 263120, 03674 263126 ) ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.