ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள்: வந்தாச்சு வாட்ஸ்அப்-ன் சூப்பர் அப்டேட்...!


ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள்: வந்தாச்சு வாட்ஸ்அப்-ன் சூப்பர் அப்டேட்...!
x
தினத்தந்தி 20 Oct 2023 11:38 AM IST (Updated: 20 Oct 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து விட்டது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்-அப் செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.

பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகளை அவ்வப்போது வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சேனல், லாக் சாட் உள்ளிட்ட வசதிகள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர் 'இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும். போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை' என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வசதியின் பயன்கள்:

முன்னதாக ஒருவர் இரண்டு செல்போன் எண்கள் வைத்திருந்தால் தனி தனியாக இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய வசதியின் மூலம் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

சில சாதனங்களில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் தரவிறக்கம் செய்ய முடியாத நிலை இருந்ததால் பயனர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். ஒரு சிலர் இரண்டு செல்போன்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த அப்டேட் மூலம் அவர்களின் சிக்கல் தீர்ந்துள்ளது.

இந்த வசதியை வாட்ஸ்அப் அமைப்புகளில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்திற்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story