மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்கள்


மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்கள்
x
தினத்தந்தி 19 Oct 2024 12:30 AM GMT (Updated: 19 Oct 2024 12:30 AM GMT)

மழைக்காலங்களில் வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பதன்மூலம் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

மழைக்காலம் என்றாலே சந்தோசம் தான், தென்றல் காற்று மெல்ல வாடைக்காற்றாக வீசி தேகத்தை சில்லென்று சிலிர்க்க வைக்கும், உள்ளம் குதூகலித்து உணர்ச்சிகள் பொங்கும் உற்சாக காலம் மழைக்காலம்.

மனிதனுக்கு மட்டுமல்ல கொசுக்களுக்கும் இனப்பெருக்கத்திற்கான காலம், மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நோய்களை உருவாக்கும் ஏராளமான கொசுக்கள் விரைவாக முட்டைகள் போட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த கொசுக்களால் மழைக்காலங்களில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவுகின்றன.

சுகாதாரமற்ற தண்ணீர், சுகாதாரமற்ற முறையில் உண்ணும் உணவுகள் மூலம் டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது, இது "சால்மோனெல்லா டைபை" என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு காய்ச்சல், உடல் பலவீனம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை போன்ற உடல் குறிகுணங்கள் இருக்கும்.

மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாலும், இன்புளூயன்சா எனப்படும் புளூ காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

லெப்டோஸ்பைரோசிஸ் என்ற பாக்டீரியா நோய்த் தொற்று மிகக்குறைவாக அறியப்பட்ட நோய். இந்நோயில் உடல் வலி, தலைவலி, தசை சோர்வு, காய்ச்சல் போன்ற தீவிர அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.

மழைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், சுகாதாரமற்ற குடிநீர், மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் டான்சிலைடிஸ் எனப்படும் உள்நாக்கு அழற்சி நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக தொண்டைவலி, குரல் கம்மல் இவைகளுடன் சில நேரம் காய்ச்சலும் வரும்.

மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்ப்பதால் நீர்க்கோவை எனப்படும் சைனசைட்டிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தும்மல், கண்களில் பாரம் போன்ற குறி குணங்கள் ஏற்படும்.

மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களும் அதிக சிரமப்படுகிறார்கள்.

இந்த நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவதுடன், போதிய ஓய்வும் அவசியம். அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. இதுதவிர சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

பொதுவான மழைக்கால நோய் தடுப்பு முறைகள்:

* பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த இள வெதுவெதுப்பான வெந்நீர் மிகச் சிறந்தது.

* பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள் இவைகளை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

* கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* முதல் நாள் மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

* வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலைகள் பயன்படுத்துவது நல்லது.

* மழைநீரில் நனைந்தால் அல்லது குளித்தால் தலையை ஈரம் நீங்க நன்றாக துடைக்க வேண்டும்.


Next Story