உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி; பிரான்ஸ் வீரர்கள் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு...!! என தகவல்


உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி; பிரான்ஸ் வீரர்கள் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு...!! என தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2022 9:10 PM IST (Updated: 18 Dec 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் விளையாடும் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் நாட்டின் 5 வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.



தோஹா,


22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக், நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதி போட்டிக்குள் நுழைந்தன.

உலக கோப்பை மகுடம் யாருக்கு என நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலக கோப்பையாக அமையும்.

இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. எனினும், போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் நாட்டின் அணி வீரர்கள் பற்றிய சில தகவல்கள் வெளிவந்து உள்ளன.

பிரான்ஸ் வீரர்கள் இரண்டு பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், அவர்கள் போட்டியை தவற விடுவார்கள் என கூறப்படுகிறது.

இதன்படி, ரபேல் வரானேவுக்கு லேசான வைரசின் பாதிப்பு அறியப்பட்டு உள்ளது. தற்காப்பு வீரரான இப்ராகிமா கொனாட்டேவுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், அவர் தனது அறையில் இருந்து வெளியே வரவேயில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

இதனால், 2 நாட்களுக்கு முன் நடந்த பயிற்சியில் கலந்து கொள்ள வரானே மற்றும் கொனாட்டே உள்ளிட்ட 5 பிரான்ஸ் அணி வீரர்கள் செல்லவில்லை. டேயர் உபாமெகானோ, அட்ரீன் ரேபியோட் மற்றும் கிங்ஸ்லே கோமன் ஆகிய மற்ற 3 பேரும் கூட வார தொடக்கத்தில் உடல்நலம் பாதித்து உள்ளனர். அதனால், அவர்கள் நேற்று முன்தினம் நடந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை.

பிரான்ஸ் அணி பயிற்சியாளர் டீடியர் தேஸ்சாம்ப்ஸ் கூறும்போது, தோஹாவில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. எந்நேரமும் உங்களுக்கு ஏ.சி. போடப்பட்டு உள்ளது. எங்கள் அணி வீரர்களில் சிலருக்கு புளூ காய்ச்சல் அறிகுறிகள் காணப்படுகின்றன. அது மற்ற வீரர்களுக்கும் பரவி விடாமல் எச்சரிக்கையாக இருக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இதனால், வீரர்களின் உடல்நல குறைவு இறுதி போட்டியில் வெற்றியை நிர்ணயிக்கும் ஒன்றாக அமைய கூடிய சூழல் காணப்படுகிறது. அந்த வகையில், அர்ஜென்டினா அணி தரப்பில் இருந்து இதுபோன்ற எந்த தகவலும் வெளிவரவில்லை.


Next Story