உலக கோப்பை கால்பந்து ஸ்டேடியங்களில் பீர் விற்பனைக்கு தடை...!


உலக கோப்பை கால்பந்து ஸ்டேடியங்களில் பீர் விற்பனைக்கு தடை...!
x

உலக கோப்பை கால்பந்து ஸ்டேடியங்களில் பீர் விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) திடீரென தடை விதித்துள்ளது.

தோகா,

22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. உலகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர், ரசிகைகள் கத்தாரை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான கால்பந்து ஹீரோக்களின் ஆட்டத்தை பார்க்க மைதானத்தில் கூடும் ரசிகர்கள் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உற்சாகமாக உரக்க குரல் எழுப்பி மகிழ்வார்கள்.

தங்கள் நாட்டு அணியின் சிறப்பான தருணங்களை ஒன்றிணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாடி திளைப்பார்கள். வழக்கமாக உலக கோப்பை போட்டி மைதானங்களில் ரசிகர்கள் உற்சாக பானங்களுடன் வலம் வருவதை பார்க்க முடியும்.

ஆனால் இஸ்லாமிய நாடான கத்தாரில் மது அருந்துவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. அங்கு பொது இடங்களில் மது அருந்த யாருக்கும் அனுமதி கிடையாது. உயர்தர ஓட்டல்களில் தான் மது விற்பனை செய்யப்படும். உலக கோப்பை போட்டியை காண வரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு வசதியாக மைதானங்களில் குறிப்பிட்ட இடங்களில் மதுவிற்பனை நடைபெறும் என்று முதலில் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் கத்தார் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் ஸ்டேடியங்களில் ஆல்கஹால் கலந்த பீர்கள் (போதை தரக்கூடியது) விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) திடீரென தடை விதித்துள்ளது.

இது குறித்து பிபா தனது டுவிட்டர் பதிவில், 'போட்டியை நடத்தும் நாட்டு அதிகாரிகள் மற்றும் பிபா இடையிலான ஆலோசனையை தொடர்ந்து பிபா ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இடம், பிற ரசிகர்களுக்கான இடம் மற்றும் லைசென்ஸ் பெற்ற இடங்களில் மட்டும் மது விற்பனை செய்வதில் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டேடியம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஆல்கஹால் கலந்த பீர் விற்பனை மையங்கள் அகற்றப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரசிகைகளுக்கு உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மது விற்பனை கெடுபிடியும் கொண்டு வருவது நிச்சயம் வெளிநாட்டு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.


Next Story