வினைப்பயன் நீக்கும் அஜா ஏகாதசி விரதம்..! யுதிஷ்டிரருக்கு விளக்கமாக எடுத்துரைத்த கிருஷ்ணர்
அஜா ஏகாதசியின் சிறப்புகளை பிறருக்கு எடுத்துக் கூறினாலும், அதை கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.
பகவான் விஷ்ணுவை வழிபடுவதற்கு சனிக்கிழமை உகந்த தினமாக கருதப்படுகிறது. அதேபோல் ஏகாதசி தினமும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாள். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் ஏகாதசி திதி வரும். ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்து வழிபடுவதால் பகவான் விஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு ஏகாதசி விரதமும் தனித்துவமான பலன்களை அளிக்கவல்லது. அவ்வகையில் அஜா ஏகாதசியில் விரதமிருந்தால் முன்வினைப்பயன் மற்றும் தீவினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளை தமக்கு விளக்கி அருளுமாறு பகவான் கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரர் கேட்க, கிருஷ்ணரும் அஜா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
"தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் கடைப்பிடித்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் ரகு வம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்" என்று ஹரிச்சந்திரன் கதையை எடுத்துக் கூறினார்.
ஹரிச்சந்திரன் கதை...
உலகம் போற்றும் சத்தியவானாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்துவந்தான். ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்தான். ரிஷியின் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக் கூறினான்.
அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, "நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள் என்றால் அதன்காரணம் அவர்களின் முன்வினைப்பயன்தான். அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, பகவான் ஹரியை துதிப்பாயாக. அப்படிச் செய்வதன் மூலம் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்" என்று உபதேசித்தார்.
ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க, விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது. இவ்வாறு ஹரிச்சந்திரன் கதையை பகவான் கிருஷ்ணர் எடுத்துரைத்தார்.
அஜா ஏகாதசியின் சிறப்புகளை பிறருக்கு எடுத்துக் கூறினாலும், அதை கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி நாளை (29.8.2024) வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்ல பலன்களை தரும்.
நாளை (29.8.2024) அதிகாலை 5 மணி முதல் நாளை மறுநாள் (30.8.2024) அதிகாலை 4.38 மணிவரை ஏகாதசி திதி உள்ளது. நாளை முழுவதும் விரதம் இருந்து, நாளை மறுநாள் காலையில் விரதத்தை நிறைவு செய்யலாம். இஸ்கான் பக்தர்கள் வைஷ்ணவ நாட்காட்டியின்படி விரதத்தை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விரதம் அனுஷ்டித்து, மறுநாள் காலையில் 6.15 மணியில் இருந்து 10.09 மணிக்குள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional