தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
x
தினத்தந்தி 30 July 2024 4:11 PM IST (Updated: 30 July 2024 5:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியானது.

இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒருசில மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதேபோல், வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து திருத்தப்பட்ட நீட் மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்காக தொடரப்பட்ட நிலையில் நீட் மறுதேர்வு நடத்தப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், திருத்தப்பட்ட நீட் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் நீட் மறுதேர்வு நடத்தப்படாது என சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், திருத்தப்பட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதன்படி, அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்றில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

2வது சுற்று செப்டம்பர் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. 3வது சுற்று செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்பின்னர், விடுபட்ட காலியிடங்களுக்கு அக்டோபர் 16ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவ கலந்தாய்வு அடுத்த மாதம் 21ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு முதலில் கலந்தாய்வு தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 21ம் தேதி கலந்தாய்வை தொடங்கலாம் என்ற உத்தேச தேதியாக இதனை மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 2வது வாரம் வரை அவகாசம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. கடந்த முறை இருந்த மருத்துவ இடங்களே உள்ளன. 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக வருவதன் மூலம் அரசு மற்றும் ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Next Story