நவம்பர் 3-ந் தேதி அமீரக கொடி நாள்: அனைத்து அமைச்சகங்கள், அரசுத்துறைகளில் ஒரே நேரத்தில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்


நவம்பர் 3-ந் தேதி அமீரக கொடி நாள்: அனைத்து அமைச்சகங்கள், அரசுத்துறைகளில் ஒரே நேரத்தில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்
x
தினத்தந்தி 27 Oct 2023 2:30 AM IST (Updated: 27 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

அமீரக கொடி நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனைத்து அமைச்சகங்கள், அரசுத்துறைகள் மற்றும் மையங்களில் ஒரே நேரத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

துபாய், அக்.27-

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக கொடிநாள் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1971-ம் ஆண்டில் இருந்து சுய ஆட்சி பகுதிகளாக இருந்த அமீரகங்கள் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த ஐக்கிய அரபு நாடாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் பின் ஜாயித் அல் நஹ்யான் மறைவுக்கு பிறகு அமீரக முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி அமீரக அதிபராக பதவியேற்றார். அந்த சிறப்பான நாளை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-ந் தேதி கொடி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

4 வண்ணங்கள்

அமீரக கொடி பக்கவாட்டில் சிவப்பு, பட்டைகளாக பச்சை, வெள்ளை, கருப்பு ஆகிய 4 வண்ணங்களை கொண்டது. இதில் சிவப்பு நிறம் உறுதி, துணிச்சல், வலிமை, ஒற்றுமை மற்றும் தியாகத்தை வலியுறுத்துவதாக உள்ளது. பச்சை நிறம் நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மறை எண்ணம் மற்றும் அன்பை கூறுவதாக உள்ளது. வெள்ளை நிறம் அமைதி, மனித நேயம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை குறிக்கிறது. கருப்பு நிறம் ஒற்றுமையுடன் எதிரிகளை தோற்கடிப்பதற்கான நிறமாக பிரதிபலிக்கிறது.

இதில் நடப்பு ஆண்டின் கொடி நாள் நவம்பர் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

அமீரக துணை அதிபர் அழைப்பு

தேசிய கொடி தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறைகள், அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி ஒரே நேரத்தில் காலை 10 மணிக்கு தேசிய கொடியை ஏற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம். ஒன்றுபட்ட உணர்வுடன் நமது தேச மக்கள் அனைவரும் இதில் பங்கேற்று கொடியேற்ற வேண்டும்.

நமது புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் கொடியை தலை நிமிர்ந்து கம்பீரமாக நிலைத்து நிற்க வைக்க இது ஒரு வாய்ப்பாகும். உயரே பறக்கும் நமது கொடியானது நமது நாட்டின் சாதனைகளையும், பெருமைகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story