வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது
விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வருகிற செப்டம்பர் 7-ம் தேதி இரவு நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். இப்பேராலயம் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களையும் சார்ந்த பக்தர்களும் வழிபடும் தலமாக திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மாதாவின் பிறந்த நாளாக கருதப்படும் செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, தேர் பவனி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வருகிற செப்டம்பர் 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 8-ம் தேதி மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.