திருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம்.. 24-ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்


திருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம்..  24-ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
x

இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் 8 மையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறியதாவது:-

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசிக்கு 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருப்பதியில் 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்கல், பொங்கல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார். துவாதசி நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story