தவப் பயனால் ஈசனை மணந்த மானுடப் பெண்
வடிவுடையாள் இறைவனுடன் ஐக்கியமானதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சிறப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி எனும் கிருபாநாயகியின் சன்னிதி உள்ளது. வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு சவுந்திரநாயகி எனும் வடிவுடையாளின் சன்னிதியும், அதனையடுத்து இறைவனது பள்ளியறையும் அமைந்துள்ளது. இதில், சவுந்திரநாயகி, தனது தவப்பயனால் ஈசனை மணந்த ஒரு மானுடப்பெண் ஆவாள்.
கருவூருக்கு மேற்கே அப்பிபாளையம் எனும் சிறிய கிராமம் இருந்தது. இங்கு வேட்டுவர் இனத்தை சேர்ந்த தனவந்தருக்கு வடிவுடையாள் என்ற பெண் இருந்தாள். அவள் மற்ற பெண்களைப் போல் அல்லாமல் அதீத அறிவுடன் வளர்ந்து வந்தாள். வயது ஏற, ஏற அவளிடம் பேச்சு குறைந்து மவுனம் அதிகரித்தது.
பசுபதீஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டார். பசுபதீஸ்வரரை தினமும் வழிபாடு செய்ய வேண்டும் எனும் மகளின் கோரிக்கையை வடிவுடையாளின் தந்தை நிறைவேற்றினார். மேலும் மகளுக்காக சந்தனக் கட்டையில் சிவலிங்கம் செய்து கொடுத்தார். அதற்கு தினமும் வழிபாடு செய்து வந்தாள். வேட்டுவர் குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தும், புலால் உண்ணாமல் சைவ வழியில் இருந்து சிவனை பூஜித்து வந்தாள்.
திருமண வயது வந்ததும், பசுபதீஸ்வரரையே திருமணம் செய்ய எண்ணினாள். அதை பெற்றோரிடமும் தெரிவித்தாள். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அன்று இரவு வடிவுடையாளின் பெற்றோரின் கனவில் பசுபதீஸ்வரர் தோன்றினார். 'உமது மகளை, யாம் பங்குனி உத்திர திருவிழா ஏழாம் நாளில் திருமணம் செய்வோம். அதன் அடையாளமாக அப்பிபாளையம் முழுவதும் அன்று பூச்சொரிந்து இருக்கும்' என்று கூறினார். அதனைக்கேட்ட வடிவுடையாளின் பெற்றோர், பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
இறைவன் சொல்லியபடி பங்குனி உத்திர திரு விழாவின் ஏழாம் நாள் உதயம் ஆன அன்று, அப்பிபாளையம் முழுவதும் பூ மழை பொழிந்து இருந்தது. அனைவரும் வடிவுடையாளின் வீட்டை நோக்கி சென்றனர். அங்கே தியானத்தில் இருந்த வடிவுடையாளின் கழுத்தினை தெய்வீக ஒளி வீசும் மலர் மாலை அலங்கரித்து இருந்தது. அனைவரும் வடிவுடையாளை தொழுது பல்லக்கில் ஏற்றி பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். கருவறைக்குள் சென்ற வடிவுடையாள் இறைவனோடு ஐக்கியமானார் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
வடிவுடையாள் இறைவனுடன் ஐக்கியமானதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சிறப்பு உற்சவம் நடத்தப்படுகிறது. பசுபதீஸ்வரரின் விக்ரகம் பங்குனி மாதம் ஆறாம் நாள் அப்பிபாளையத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏழாம் நாள் வடிவுடையாள் விக்ரகத்துடன் மீண்டும் கோவிலுக்கு கொண்டுவரப்படுகிறது.