இன்று நரசிம்ம ஜெயந்தி.. சந்திப்பொழுதில் வழிபடுவது சிறப்பு

நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு நரசிம்மரின் ஆலயத்தில் மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது சிறப்பு.
பெருமாளின் அவதாரங்களில் உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம். தன் பக்தன் பிரகலாதனின் வாக்கை உண்மையாக்கி, பக்திப் பாதையை உலகிற்கு எடுத்துரைத்த உன்னதமான அவதாரம். பகவான் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காவும், பிரகலாதனின் பக்தியை தொடர்ந்து சோதித்து துன்புறுத்திய இரணியனை வதம் செய்வதற்காகவும் தூணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். சித்திரை மாதத்தில் வரக்கூடிய சுவாதி நட்சத்திர நாளில்தான் நரசிம்மர் அவதரித்தார். அன்றைய தினம் நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுவதும் நரசிம்மர் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில்தான், அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம், வளர்பிறை சதுர்த்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜெயந்தி வழிபாடு ஆகும்.
நரசிம்ம ஜெயந்தியான இன்று அருகில் உள்ள நரசிம்மரின் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் சென்று நரசிம்மருக்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு தரிசனம் செய்யலாம். ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் நரசிம்மருக்கு உரிய பூஜைகளை எளிய முறையில் செய்து வழிபடலாம்.
நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன் மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7.30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. நரசிம்மருக்கு மிகவும் பிடித்தமான நைவேத்யம் பானகம் மற்றும் நீர்மோர். எனவே, நரசிம்மர் வழிபாட்டில் இவை இரண்டையுமே நைவேத்தியமாக வைக்கலாம் அல்லது ஏதாவது ஒன்றை படைக்கலாம். நரசிம்மர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம் ஆகியவற்றை நரசிம்மர் வழிபாட்டிற்கும் உபயோகிக்கலாம்.






