சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: 18-ம் தேதி கொடியேற்றம்
![சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: 18-ம் தேதி கொடியேற்றம் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: 18-ம் தேதி கொடியேற்றம்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38447484-brahmotsavam-booklet.webp)
பிரம்மோற்சவத்திற்கான புத்தகத்தை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளியிட்டார்
பிரம்மோற்சவ விழாவின் பிரதான நிகழ்வான கருட வாகன சேவை 22-ம் தேதி நடைபெறுகிறது.
திருமலை:
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 18-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி விழா நிகழ்வுகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி திருமலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது. திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.
பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு முன்னதாக பாரம்பரிய வழக்கப்படி மேற்கொள்ளப்படும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி 13-ம் தேதி நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17-ம் தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம், 18-ம் தேதி கொடியேற்றம், 22-ம் தேதி கருட வாகன வீதிஉலா, 23-ம் தேதி மாலை தங்கத் தேரோட்டம், 25-ம் தேதி மரத்தேரோட்டம், 26-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
மேற்கண்ட வாகன சேவைகள் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் நடக்கின்றன. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.