திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.
7-ம் திருநாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசுகாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்த பிறகு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து தெற்கு ரதவீதி, மேல ரதவீதி சந்திப்புக்கு சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் வந்தனர். அங்கு தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை தெய்வானை அம்பாள் மூன்றுமுறை வலம் வந்தார். பின்னர் சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டாடைகள், மாலைகள் மாற்றப்பட்டன. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனையான பின்னர், அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளிலும் உலா வந்து சன்னதி தெரு வழியாக கோவிலுக்கு சென்றனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீகமுறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (புதன்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்துள்ளனர்.









