தோரணமலை பெயர் வந்தது எப்படி?
சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைகள் நிறைந்ததாகவும் தோரணமலை கோவில் விளங்குகிறது.
எழில் கொஞ்சும் இயற்கைகளை தன்னகத்தே கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் பொதிகை மலை உள்ளது. அதற்கு வடக்கே, பொங்கி விழும் அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலம். இவை இரண்டுக்கும் நடுவே அமைந்துள்ளது தான் தோரணமலை. மலையின் உச்சியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைகள் நிறைந்ததாகவும் இந்த கோவில் விளங்குகிறது.
மலையின் உச்சிப்பகுதியை கவனித்தால், ஒரு யானை படுத்திருப்பது போல காட்சி அளிக்கும். இதனால் இதனை யானை மலை என்று அழைப்பார்கள். யானைக்கு வாரணம் என்றும் பெயர் உண்டு. எனவே இதனை வாரணமலை என்று அழைத்தனர். அதுவே தோரணமலை என்று மருவி அழைக்கப்படுகிறது. மேலும் இந்த மலையில் சுனைகளும், மூலிகைகளும் தோரணங்களாக விளங்கி அழகு சேர்க்கின்றன. அந்த வகையிலும் தோரணமலை என்ற பெயர் மிக பொருத்தமாக அமைந்துள்ளது.
பொதுவாக இரு நதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஓடுகிறது.
அகத்தியர், தேரையர் மற்றும் சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. தோரணமலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை இங்கு பெற முடியும்.