அய்யப்ப விரத மகிமைகள்

அவரவர் தாய் மொழியில் அய்யப்பன் நாமங்களை சரணம் சொல்லி வழிபடவேண்டும்.
அய்யப்ப விரதம் ஐம்பது நாட்களுக்குக் குறையாதது. இந்த விரதத்தை விரதத்திற்கு பெரிய எல்லாம் பெரிய விரதம் என்றே சொல்லலாம்! எல்லா விரதங்களும் மவுனமாக இருக்கவும், பட்டினியிருக்கவும். கண் விழிக்கவும், தெய்வ வழிபாடு செய்யவும் தான் வலியுறுத்தும். ஆனால் ஐம்புலன்களையும் அடக்கி அதன் வழி இறை உணர்வைக் காட்டும் ஒரே விரதம் அய்யப்ப விரதம்.
கீதையின் போதனையும் ஞானிகளின் உபதேசமும், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் யாவும் ஆணித் தரமாய் வற்புறுத்துவது ஐம்புலன் அடக்கமே! அதை செயலில் காட்ட செய்வதே அய்யப்ப விரதத்தின் மகிமை!
பிரம்மச்சர்யம்: பிரம்மச்சர்யம் என்றால், ஆண்- பெண் சேர்க்கையைத் தவிர்ப்பது என்பதாகும். ஆனால் அய்யப்ப விரதம் என்ன சொல்கிறது என்றால், மனதாலும் பெண்ணைத் தீண்டாதிருப்பதே பிரம்மச்சர்யம் என்கிறது. அது மட்டுமல்ல இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் அனைவரும் தாங்கள் பார்க்கும் பெண்களை அம்பிகையின் அவதாரமாகக் கருதுவதே இவ்விரதத்தின் உயர்ந்த தத்துவம்.
நீராடல்: அனுதினமும் காலை, மாலை இருவேளையும் தவறாது குளிர்ந்த நீரில் நீராடி வழிபட வேண்டும். மழையோ பனியோ குளிரோ எதுவாக இருந்தாலும் தொடர்ந்து 45 நாள் முதல் 50 நாள் வரை நீராடி விரதத்தின் முடிவாக சபரிமலை யாத்திரையில் நேரும் மழை, பனி, குளிர், இயற்கை சீதோஷ்ணத்திற்கு உடல் நிலை பாதிக்கப்படாமல் இருக்க நம்மை பழக்கப்படுத்தி தயார்படுத்துவது இவ்விரதத்தின் சாதனை என்றே சொல்லலாம்.
வழிபாடு: அவரவர் தாய் மொழியில் அய்யப்பன் நாமங்களை சரணம் சொல்லவேண்டும். கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப அய்யப்பன் நாமத்தை சொல்லி வழிபட்டு பானகம் நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை செய்து வழிபட்டால் போதுமானது.
காவி உடை: அய்யப்ப விரதம் மேற்கொள்ளும்போது காவி உடை அணிய வேண்டும். ஏன் தெரியுமா? மற்ற மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்டவும். அய்யப்பனுக்குரிய மரியாதையை கிடைக்கச் செய்யவும் தன்னைத்தானே தானே உணர்ந்து சதா சர்வகாலமும் அய்யப்பனை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கவும், கொலை, களவு, பொய், வன்முறை போன்ற எந்த தீமையும் எண்ணத்தில் கூட வராமலிருக்கும் பொருட்டு அறிவுறுத்தும் வகையில் காவி ஆடை விரதம் கொள்வோருக்கு கவசமாக இருந்து உயர்த்துகிறது.
மாயையைக் குறிப்பது கறுப்பு. அய்யப்பா! நான் மாயையில் உழன்று தவிக்கிறேன். என்னை மாயையில் இருந்து விடுபடச் செய்! என்று வேண்டிக் கொள்ள ஏதுவாக கறுப்பு நிற ஆடைகள் அமைகிறது.
உணவு பழக்கம் : விரத காலத்தில் நண்பகல் உணவும், இரவு பலகாரமும் உணவும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். தினசரி வாழ்க்கையில் பயன்படுத்திய பாய், தலையணை, போர்வை எதுவுமே விரத காலத்திற்கு உகந்தது அல்ல. இவை இன்றி படுத்துறங்க பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் காட்டுப் பிரதேச பயணத்தில் இவை பெரிதும் உதவும். இந்த நியதி மூலம் எப்படியும் வாழ முடியும் என்ற நிலைக்கு மாற்ற அய்யப்ப விரதம் பக்தர்களை முழுமையாக தயார்படுத்துகிறது.
விரதத்திற்கு ஏற்றவர் யார்? அய்யப்பன் மீது பக்தி கொண்ட ஆண்கள் அனைவருமே விரதம் இருக்க தகுதி உடையவர்களே. பெண்களில் சிறுமிகளும், பெரியவர்களில் வீட்டு விலக்கு நின்று போனவர்களும் மட்டுமே இவ்விரதத்தை கடைபிடித்து சபரிமலை சென்று அய்யப்பனைக் காணவேண்டும். ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும். விரதத்தின் அம்சம்: "நான்" என்ற அகங்காரம். கெட்டப்புத்தி, எல்லாம் எனக்கே என்ற சுயநலம் போற்றவை சிறிதளவும் காண முடியாத உயர்ந்த சிறந்த விரதம் அய்யப்ப விரதமாகும். இவ் விரதம் இருப்பவர்கள் எல்லோருமே எதிரே ஒரு அய்யப்ப பக்தரைக் கண்டால் 'சாமி' என்றே ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வர்.