சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பகவான்
ஐந்து தலைகள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர், வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.
திருப்பதி:
திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
முதல் நாளான நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான இன்று காலையில் ஐந்து தலைகள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர், வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கற்பூர ஆரத்தி எழுந்து பகவானை வழிபட்டனர். மேலும், வாகனத்தின் முன்பாக மேள தாளங்கள் முழங்க நடனமாடியும், கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தியும் மகிழ்ந்தனர்
இன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை பகவான் அன்ன வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.
26-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.