பூண்டி மாதா பிறப்பு பெருவிழா.. நாளை கொடியேற்றம்


பூண்டி மாதா பிறப்பு பெருவிழா.. நாளை கொடியேற்றம்
x
தினத்தந்தி 29 Aug 2024 10:54 AM IST (Updated: 29 Aug 2024 11:45 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி மாதாவின் பிறப்பு பெருவிழா நாளாக கருதப்படும் செப்டம்பர் 8-ம் தேதி மாலை சிறு தேர் பவனி நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் பூண்டி மாதாவின் பிறப்பு பெருவிழா நாளை தொடங்கி அடுத்த மாதம் 9-ம் தேதி நிறைவு பெறுகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. பூண்டி அன்னையின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் ஜீவானந்தம் புனிதம் செய்து கொடி மரத்தில் ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அதனைத் தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறுசப்பரபவனி நடைபெறும். நாளை மறுநாள் (ஆகஸ்டு 31) மாலை மரியா-இறை வார்த்தையை அடித்தளமாக கொண்டவர் என்ற தலைப்பில் திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரி பேராசிரியர் லெரின் டி ரோஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

செப்டம்பர் 1-ம் தேதி (மூன்றாம் நாள்) மாலை மரியா- நற்பண்புகளின் இருப்பிடம் என்ற தலைப்பில் திருச்சி புனித வளனார் கல்லூரியின் முதல்வர் மரியதாஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார். விழாவின் 4ம் நாளான செப்டம்பர் 2-ம் தேதி மரியா -உறவை விரும்பியவர் என்ற தலைப்பில் கோயம்புத்தூர் நல்லாயன் குருத்துவக் கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ் திருப்பலி நிறைவேற்றி அனைவருக்கும் ஆசி வழங்குகிறார்.

5-ம் நாளான செப்டம்பர் 3-ம் தேதி மரியா- தளரா நம்பிக்கையின் மாதிரி என்ற தலைப்பில் ரோம் பாப்பிறை சலேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்டனி கிறிஸ்டி மறை உரையாற்று கிறார். ஆறாம் நாள்4-ந்தேதி மரியா- சவால்களை மகிழ்வோடு ஏற்றவர் என்ற பொருளில் சமயபுரம் பிரான்சிஸ்கோ கப்பூச்சின் குருத்துவக் கல்லூரி அதிபர் அகஸ்டின் நியூட்டன் திருப்பலி நிறைவேற்றுகிறார். 5-ம் தேதி மரியா-துயருறுவோரின் ஆதரவு என்ற தலைப்பில் சென்னை பூவிருந்தவல்லி தூய இருதய குருத்துவக் கல்லூரி அதிபர் ஜோ ஆண்ட்ரு திருப்பலி நிறைவேற்றி ஆசி கூறுகிறார். விழாவின் எட்டாம் நாளான செப்டம்பர் 6-ம் தேதி மாலை சிறு சப்பரபவனிக்கு பிறகு விரகாலூர் பங்குத்தந்தை அகஸ்டின் மரியா- தியாகத்தின் வழிகாட்டி என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார். செப்டம்பர் 7-ம் தேதி மரியா -எளிமையின் அடையாளம் என்ற பொருளில் செங்கல்பட்டு தர்காஸ் பங்குத்தந்தை லியோ தோமினிக் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

தேர் பவனி

பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா நாளாக கருதப்படும் செப்டம்பர் 8-ம் தேதி மாலை சிறு தேர் பவனிக்கு பின்னர் சேலம் மறை மாவட்ட பிஷப் ராயப்பன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி அனைவருக்கும் ஆசி வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் வண்ணமயமான மின்விளக்கு அலங்காரத்திலும் ஜொலிக்கும் பூண்டி மாதாவின் சுரூபம் வைக்கப்பட்ட தேரை புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.

செப்டம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story