முக்தி தரும் பரமபத வாசல்
பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிரளய காலம் ஒன்றில் எங்கும் தண்ணீராகக் காட்சி அளித்தது. அதில் விஷ்ணு பகவான் யோக நித்திரையில் இருந்தார். அப்பொழுது அவரது காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அவர்கள் கடும் தவம் செய்து, அற்புதமான சக்திகளைப் பெற்றனர். அந்த நேரத்தில் மீண்டும் இந்த உலகத்தில் உயிர்களை தோற்றுவிக்க பிரம்மன் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த மது, கைடபர் இருவரும் பிரம்மனை போருக்கு அழைத்தனர். அவர்களின் சக்தியை கண்டு திகைத்த பிரம்மா, விஷ்ணுவை துதித்தார்.
யோக நித்திரையில் இருந்து எழுந்து வந்த விஷ்ணு, நெடும்போர் செய்து அவர்கள் இருவரையும் அழித்தார். விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியதால், அசுரர்களின் ஆன்மா வைகுண்டம் செல்லும் பாக்கியத்தைப் பெற்றது. அப்படி அவர்கள் வைகுண்டம் சென்ற தினம், ஒரு மார்கழி வளர்பிறை ஏகாதசி ஆகும். அப்போது அவர்கள் இருவரும் விஷ்ணுவிடம், "எங்களைப் போல் இந்த மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று யார் விரஜா நதி தாண்டி பரமபத வாசலைக் கடந்து செல்கிறார்களோ, அவர்களுக்கும் தாங்கள் மோட்சம் அருள வேண்டும்" என்று வேண்டினர்.
அதன்படியே பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஏகாதசி 'மோட்சத்திற்கான ஏகாதசி' என்று போற்றப்படுகிறது. பரமபத வாசல் வழியாக சென்றால் பகவானின் அருளால் மகிழ்ச்சியான வாழ்வு அமைவதுடன், மீண்டும் பிறவா நிலையான முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.