பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலையில் 1-ம் தேதி நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த திருவிழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 11-ந் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது. சபரிமலையில் கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் 18-ம் படி ஏறி வந்தவுடன் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் பூஜை நாட்களிலும் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.