துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள்


துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள்
x

துர்கையின் வடிவங்களில் மிகவும் சக்தி படைத்த அன்னையாக கருதப்படும் சூலினி துர்கை சிவனின் உக்ரவடிவ தேவி ஆவாள்.

தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படும் துர்கை அம்மனை ஒன்பது வகை துர்கையாக பிரித்து வழிபடுகிறார்கள். அந்த அன்னைகளின் சிறப்புகள் வருமாறு:-

வன துர்கை: பண்டைத் தமிழ் இலக்கியங்களில் 'கொற்றவை' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள் வனதுர்கை. அகத்திய முனிவரும், ராவணனும் இந்த தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது. ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக, அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்கையை வழிபட்டதாகவும் சொல்கிறார்கள். வன துர்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம். லலிதா சகஸ்ரநாமத்தில் 'மகாவித்யா' என்ற வரி வரும். அது வன துர்கையை குறிப்பிடுவதே ஆகும். தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கதிராமங்கலம், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தருமபுரம் என அபூர்வமாகவே வன துர்கை கோவில்கள் காணப்படுகின்றன.

சூலினி துர்கை: துர்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. சிவனின், உக்ரவடிவ தேவி இவள். திருவாரூர் மாவட்டம் பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ளது, அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலம். இங்கே மாகாளி அன்னை, சூலினி துர்கையாக காட்சி தருகிறாள். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை மற்றும் ஆடைகளை அணிவிக்கிறார்கள்.

ஜாதவேதோ துர்கை: சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவையே முருகனாக மாறின. நெற்றிக் கண்ணில் உருவான தீப்பொறிகளை ஏற்றுக் கொண்டு கங்கை நதியில் சேர்த்ததால் இந்த துர்கைக்கு 'ஜாதவேதோ துர்கை' என்று பெயர். யஜுர் வேதத்தில், துர்க்கா ஸுக்தம் என்ற பகுதி உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸுக்தம் ஜாத வேதஸே என்றே தொடங்குகிறது.

சாந்தி துர்கை: இறை வழிபாட்டால் விளையும் பயன்களில் மிகவும் சிறந்தது உள்ளத்துக்கு கிடைக்கும் அமைதியே ஆகும். 'ஓம் சாந்தி.. சாந்தி..' என்றே வேதங்களும் பிரார்த்திக்கின்றன. தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவச் வழிசெய்பவள் சாந்தி துர்கை என்று அழைக்கப்படுகிறாள்.

சபரி துர்கை: ஒரு சமயம் சிவபெருமான் வேடுவன் உருவத்தைத் தாங்கியபோது, பார்வதி தேவி வேடுவப் பெண்ணாக வடிவம் கொண்டு அவருடன் வந்தாள். வேடுவச்சி உருவம் எடுத்த துர்கையையே, 'சபரி துர்கை' என்று அழைக்கிறார்கள்.

ஜ்வாலா துர்கை: அன்னை ஆதிபராசக்தி பண்டாசுரன் என்ற அசுரனுடன் கடும்போர் புரிந்தபோது, மற்ற எதிரிகள் பார்வதி தேவிக்கு அருகில் வராமல் தடுப்பதற்காகத் துர்கை தேவி அக்னி ஜ்வாலையுடன் கூடிய மிகப்பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தாள். இந்த செயலை செய்த துர்கை தேவியே, 'ஜ்வாலா துர்கை' எனப்படுகிறாள்.

லவண துர்கை: ராமாயண காலத்தில் லவணாசுரன் என்றொரு அசுரன் இருந்தான். அந்த அசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வழிபட்ட துர்கையே 'லவண துர்கை' ஆவாள். லவணாசுரன் அழிவதற்குக் காரணமாக இருந்ததால், இவள் லவண துர்கை எனப்பட்டாள்.

தீப துர்கை: தீபமாகிய விளக்கு புற இருளை அகற்றி ஒளி வழங்குகிறது. பக்தர்களின் மனதில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் அக இருளை நீக்கி மெய் ஞானமான ஒளியை வழங்கும் தீபலட்சுமியே 'தீப துர்கை' என்று போற்றப்படுகிறாள்.

ஆசுரி துர்கை: பக்தர்களிடம் உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்துக்கு அழைத்துச் செல்பவள், ஆசுரி துர்கை ஆவாள்.


Next Story