திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை விழா


திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை விழா
x

நடராஜரை நந்தனார் வழிபட்ட காட்சி

கோவில் வாசலில் நின்றபடி சிவபெருமானை நந்தனார் தரிசனம் செய்தபின், அவரை கோவிலின் உள்ளே வரவேற்று பரிவட்டம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புங்கூர் கிராமத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் புற்று ரூபமாக மூலவராக விற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த நந்தனார் சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க செல்லும் போது திருப்புங்கூர் தலத்திற்கு வந்தடைந்தார். இங்கு அவர் சிவபெருமானை தரிசிக்க சென்றபோது கோவிலுக்குள் செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவிலின் வாசலிலேயே நின்று சிவபெருமானை தரிசிக்க முயன்றார். ஆனால் கருவறை முன்பு இருந்த நந்தி பகவானை தாண்டி சிவபெருமானை அவரால் பார்க்க முடியவில்லை.

தன்னால் இறைவனை காண முடியவில்லையே என மனதார சிவபெருமானை வேண்டி நந்தனார் காத்திருந்தபோது தனது பக்தனின் வேதனையை அறிந்த சிவபெருமான் நந்தி பகவானை சற்று விலகி இருக்குமாறு பணித்தார். அதன்படி நந்தி பகவான் கருவறை முன்பு நேராக இல்லாமல் இடதுபுறமாக சற்று விலகி இருந்தார். அப்போது வாயிலில் நின்றே இறைவனை நந்தனார் மனமுருகி வேண்டியதாக கோவில் வரலாறு தெரிவிக்கின்றது.

இன்றளவும் கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வெளியே நின்றே மூலவரை தரிசிக்கலாம், நந்தி பகவான் விலகியே இருப்பார்.

இவ்வளவு சிறப்புமிக்க இக்கோவிலில் நந்தனார் பிறந்தநாளான புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரமான சனிக்கிழமை நந்தனார் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக கோவிலில் இருந்து புறப்பட்ட நந்தனார் நான்கு வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பினார். அவர் கோவில் வாசலை வந்தடைந்தபோது ராஜகோபுர வாயில் மூடப்பட்டிருந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்படும் போது ராஜகோபுர கதவு தொடங்கி, கருவறை உள்ள நான்கு கதவுகளும் திறக்கப்பட்டு மூலவருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இக்காட்சியை நந்தனார், வாசலில் நின்றபடி தரிசித்தார்.

அதனை தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க நந்தனாரை கோவிலின் உள்ளே வரவேற்று பரிவட்டம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீர்காழி பன்னீர்செல்வம் எம்எல்ஏ, அறங்காவலர் நியமன குழு தலைவர் சாமிநாதன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர்கள் வெங்கடேஷ் , கணேஷ், மேலாளர் ராஜி மற்றும் திரளான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு நந்தனாரையும் சிவலோகநாத சுவாமியையும் வழிபட்டனர். முன்னதாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story