மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா - நாளை தொடங்குகிறது
மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா நாளை தொடங்குகிறது.
மதுரை,
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு முதல் திருவிழாவான மார்கழி மாத எண்ணெய் காப்பு உற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி அளவில் மீனாட்சி அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அம்மனுக்கு தைலகாப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும். பின்னர் மீனாட்சி அம்மன் அங்கிருந்து புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகள் சுற்றி கோவிலில் வந்து சேருவார்.
விழாவில் 11-ந் தேதி அன்று கோரதத்திலும், 12-ந் தேதி கனகதண்டயலில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர். 13-ந் தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்திலிருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும் அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளியும் ஆடி வீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாத திருவெண்பா உற்சவம் 4-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் 10 நாட்களும் மாணிக்கவாசகர் சுவாமிகள் 100 கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன்பாக எழுந்தருளுவார். அங்கு தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி தீபாராதனை நடைபெறும். பின்னர் மாணிக்கவாசகர் 4 ஆடி வீதிகளில் சுற்றி வருவார். 13-ந் தேதி 10 நாள் பொன்னூஞ்சல் தினத்தன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமிகள் சன்னதியில் திருவெண்பா பாடி முடிந்தவுடன் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் சுற்றி வந்து கோவிலுக்குள் வந்தடைவர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.