வழிபாட்டிற்கு உகந்த மார்கழி மாதம்
திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் மார்கழி. வழிபாட்டிற்கு உகந்த மாதமான மார்கழி, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்கிறது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம்.
தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள்.
மார்கழி முதல் நாளிலிருந்து 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மீது அழகாய் பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவார்கள். இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியேறுவாள் என்பது ஐதீகம். மார்கழி மாதங்களில் அழகிய கோலமிட்டு அந்த கோலத்தின் மீது பரங்கிப்பூக்களை வைத்து அழகுப்படுத்தும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே உள்ளது. இந்த மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாகப்பூக்கும் என்பதால் இந்தப் பூவினை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். இப்போது சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பூக்களை பயன்படுத்துகிறார்கள்.
கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. கோலம் இடுதல் ஒரு கலை. இதில் ஒரு ஆரோக்கிய ரகசியமும் ஒளிந்துள்ளது. கோலம் இடுவதற்காக காலையில் எழுவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தருகிறது. ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். அதிகாலையில் சுத்தமான காற்று உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காக மற்ற சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ஆண்டாள் பாடிய 'திருப்பாவை' ஆண்டாள் பாசுரம் என்று அழைக்கப்படுகிறது. விடியும் முன்பே எழும் கன்னியர், பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனை துதித்து வழிபடுவதை ஆண்டாள் தனது அழகிய பாசுரங்களில் விவரித்திருப்பார்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். இதேபோல் மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழாவும் வருகிறது. திருப்பாவை போன்று திருவெம்பாவையில் சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி வருகிறது.