மதுரை ஆவணி மூல திருவிழா: உலவாக்கோட்டை அருளிய லீலை


உலவாக்கோட்டை அருளிய லீலை
x
தினத்தந்தி 10 Sept 2024 11:23 AM IST (Updated: 11 Sept 2024 1:51 PM IST)
t-max-icont-min-icon

உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி வரை காலை மற்றும் இரவில் சுவாமி சந்திரசேகர் உற்சவ புறப்பாடு நடைபெற்றது.

அதன்பின்னர் திருவிளையாடல் லீலைகள் நடத்தப்படுகின்றன. 5-ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 6-ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய திருவிளையாடலும், 7-ம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (8-ம் தேதி) தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல் லீலை நடந்தது. நேற்று (9-ம் தேதி) உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரம் நடந்தது. இந்த திருவிளையாடல் அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.

புராண வரலாறு

மதுரையில் வாழ்ந்து வந்த அடியார்க்கு நல்லார் என்ற சிவனடியார், தர்மத்தின் திருவுருவாக திகழ்ந்தார். சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உண்பது என்ற கொள்கையை கொண்டிருந்தார். அவரை சோதித்து அவரது பெருமையை உலகறியச் செய்ய நினைத்த இறைவன் சோமசுந்தரப் பெருமான், அந்த குடும்பத்தில் வறுமையை ஏற்படுத்தினார்.

வருமானம் இல்லாமல், கையிருப்பு அனைத்தும் தீர்ந்த நிலையிலும் கடன் பெற்று தனது கடமையை நிறைவேற்றி வந்தார் அடியார்க்கு நல்லார். ஒருகட்டத்தில் அவர்களின் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனது. கடனும் கிடைக்கவில்லை. தனது பட்டினியைவிட அடியவர்களுக்கு தொண்டு செய்யும் தனது கடமையை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனதை எண்ணி வேதனை அடைந்தார். இதனால், வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்த அவர், தன் மனைவியுடன் சோமசுந்தரர் கோவிலுக்கு சென்றார். இறைவனை தரிசனம் செய்த அவர், 'உனது அடியவர்களுக்கு சேவை செய்ய முடியாத நாங்கள் வாழ்ந்து என்ன பயன்? எங்களின் உயிரை எடுத்துக்கொள்' என கதறினார்.

மேலும் அவர்களை சோதிக்க விரும்பாத இறைவன், அசரீரியாக தோன்றி "வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலவாக்கோட்டை ஒன்றை அளித்துள்ளோம். அதைக்கொண்டு எனது அடியவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்" என்று கூறினார். உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும்.

இறைவன் கூறியபடியே இருவரும் வீடு திரும்பி, உலவாக்கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர் என்று புராணம் கூறுகிறது.


Next Story