மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை அஷ்டமி சப்பர வீதி உலா


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை அஷ்டமி சப்பர வீதி உலா
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை அஷ்டமி சப்பர வீதி உலா நடக்கிறது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை மாதம் மாசி வீதிகளில் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதன்பின்னர் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழா பிரசித்தி பெற்றவை.

இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவிழா தினத்தன்று காலை 5 மணிக்கு சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழமாசி வீதி வருவர்.

அங்கு தனித்தனியாக தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைவர். அதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள்.

திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டினால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. இந்த அஷ்டமி திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது நடந்து வருகிறது. மேலும் தேர் செல்லும் வகையில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.


Next Story