துன்பங்களை போக்கும் ராம தூதன்


துன்பங்களை போக்கும் ராம தூதன்
x

அனுமன் தனது பக்தர்களை துன்பங்கள், எதிரிகள், நோய்கள் என அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றுகிறார்.

ராவணனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு, ராமனாக அவதரிக்கும் நேரம் வந்தது. அப்போது அவருக்கு உதவ, தெய்வீக சக்தி படைத்த பலரும் முன்வந்தனர். அந்த வகையில் சிவபெருமானும் தன்னுடைய பங்கை ராமனுக்கு வழங்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காகவே தன்னுடைய சக்தியை, ஒரு பெண்ணிடம் சேர்த்துவிடும்படி வாயு தேவனை அவர் பணித்தார்.

அந்த நேரத்தில் கிஷ்கிந்தா என்ற வனப்பகுதியில் கேசரி என்ற வானர அரசனின் மனைவியான அஞ்சனை தேவி குழந்தை வரம் வேண்டி சிவனை நினைத்து தவமிருந்தாள். அவளிடம் ஈசனின் சக்தியை கொண்டு போய் சேர்த்தார், வாயு பகவான். அதன் மூலம் அஞ்சனைக்கு பிறந்தவரே, அனுமன் என்கிறது ராமாயண இதிகாசம். அதன்படி ஒரு மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அவதரித்தார், அனுமன் என்னும் ஆஞ்சநேயர்.

கைகேயியால் வனத்திற்கு அனுப்பப்பட்ட ராமனுடன், அவரது மனைவி சீதையும், தம்பி லட்சுமனனும் உடன் சென்றனர். அங்கே சூர்ப்பனகைக்கும் ராம-லட்சுமணருக்கும் பிரச்சினை உண்டானது. தன் தங்கை சூர்ப்பனகைக்காக பழிவாங்க நினைத்த ராவணன், ராமரின் மனையியான சீதையை கடத்திச் சென்று இலங்கையில் சிறைவைத்தான்.

சீதையை ராவணன் கடத்தி வைத்த இடம் தெரியாததால் ராமரும், லட்சுமணரும் பரிதவித்தனர். அந்த நேரத்தில்தான் ராமரை சந்திக்கும் பாக்கியம் அனுமனுக்குக் கிடைத்தது. அப்போது முதல் ராமரின் நிழலாகவே இருந்து அவருக்கு பல உதவிகளைச் செய்தார். சீதையை மீட்'கும் வழி தெரியாமல் நின்ற ராமனுக்கு, ஒரு வழிகாட்டியாக, சிறந்த சேவகனாக தோளோடு தோள் நின்றார்.

சுக்ரீவனிடம் ராமரை அழைத்துச் சென்றார். வாலிக்கும் சுக்ரீவருக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார். சீதையை இலங்கையில் கண்டு, விரைவில் ராமர் வந்து மீட்பார் என்று கூறியதுடன், சீதையால் சிரஞ்சீவியாக இரு என்று ஆசிர்வதிக்கப்பட்டார். ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றார். ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித்தின் அம்பு பட்டு மயங்கிய லட்சுமணனை காப்பாற்ற சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார். 14 ஆண்டு வனவாசம் முடிந்தும் ராமர் திரும்பி வராததால் தீக்குளிக்க முயன்ற பரதனை, காற்றை விட வேகமாகச் சென்று காப்பாற்றினார்.

இப்படி பல அரிய செயல்களைச் செய்ததால்தான், ராமருடன் சேர்த்து அனுமனையும் வழிபடுகிறோம். அப்படிப்பட்ட அனுமனின் ஜெயந்தி விழா, வருகிற 30-ம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. அனுமன் சன்னிதி அமைந்திருக்கும் அனைத்து ஆலயங்களிலும் இந்த விழா வெகு விமரிசையாகவே நடைபெறும். அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும்.

அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷம் விலகும், அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும், மன உறுதி ஏற்படும், அச்சம் அகலும், நோய் நொடிகள் விலகும், தெளிவு உண்டாகும், வாக்கு வன்மை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். அனுமனை வழிபடுபவர்களை, பிரம்மச்சாரிகள் என்று கருதும் பலரும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் அனுமன் சிலையையோ, படத்தையோ வீட்டில் வைத்து வழிபட்டால், அவர்களும் பிரம்மச்சாரிகளாக மாறும் வாய்ப்பு உண்டு என்றும் சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ராமரும், சீதையும் பிரிந்திருந்த காலகட்டத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே தூது சென்று அவர்கள் இணைவதற்கு பெரும்பங்கு வகித்தவர் அனுமன். அந்தவகையில் இவரை வழிபாடு செய்தால், தம்பதிகளின் ஒற்றுமை பலப்படும் என்பதே உண்மை.

அனுமன் தனது பக்தர்களை துன்பங்கள், எதிரிகள், நோய்கள் என அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றுகிறார். ராமபிரானின் முதன்மை பக்தர், சிறந்த சேவகர் என்ற போற்றுதலுக்கு உரியவர் அனுமன். ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் நிச்சயமாக இருப்பார். அந்த வகையில் ராமரின் திருவுருவம் அல்லது படத்தை வைத்து, ராம நாமம் சொல்லி வழிபட்டாலும், அனுமனின் ஆசி கிடைக்கும்.


Next Story