ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவை,

கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையையொட்டி 18 நாட்கள் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா தை அமாவாசையான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் சிம்ம வாகனம் பொறித்த மஞ்சள் நிற கொடி கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக கொடிமரத்தை தோளில் சுமந்தவாறு கோவிலுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து மங்கள வாத்தியம், பேண்டு வாத்தியங்கள் முழங்க 10.12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. அப்போது 5 கருடன் கொடிமரத்தை வட்டமிட்டன. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் ''மாசாணி தாயே, மாசாணி தாயே'' என்று பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். பின்னர் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கொடி மரத்திற்கு பாலாபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன.

ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் வருகிற 11-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் மயான பூஜை நடக்கிறது. 12-ந் தேதி காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை, 13-ந் தேதி காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத்தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.

14-ந் தேதி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். குண்டம் விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story