தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் கும்பாபிஷேக விழா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா விழாவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் தெற்குகாட்டில் பூர்ணா புஷ்கலாம்பிகை சமேத சேவுகராயர் ஐயனார் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 9-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது.
இன்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பாடாகி, கோவிலை வலம்வந்தன. பின்னர் விமானத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிவி ராஜேந்திரன், தொழிலதிபர் பிரபு, அகரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், உப்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வேதரத்தினம், உள்ளிட்ட ஆயிரக்கானக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனி
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிங்கர் காப்பு மகாஜன சங்கம் சார்பில் பழனியில் உள்ள சங்க திருமண மண்டபத்தில் நன்மை தரும் விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பூஜையின் நிறைவில் சிவாச்சாரியார்கள், அந்த புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் அந்த புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் பிரியம் நடராஜன், பொருளாளர் சுப்பிரமணியன், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி நெல்லியங்குளம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நெல்லியங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வெற்றி விநாயகர், முனீஸ்வரர், இருசய்யம்மன், அம்மைச்சார் அம்மன், கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக பூஜைகளுக்காக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து முனீஸ்வரருக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்த புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முனீஸ்வரருக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நெல்லியங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை கூறைநாடு
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ள மங்களாம்பிகை உடனாகிய மன்மத சுவாமி மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கலசத்தில் புனித நீரை ஊற்றி பூஜை செய்யப்பட்டது. பின்னர் வானவேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் அந்த புனித நீரை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வளம் வந்து கோபுர கலசத்திற்கு அடைந்தனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, வானத்தில் கருடன் வட்டமிட, பக்தர்கள் பரவச கோஷங்கள் எழுப்ப, சண்டிகேஸ்வரர், கல்யாண நவகிரஹம், கால பைரவர் சுவாமிகள் ஆகிய கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள சாமி சிலைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா அபிஷேகம் செய்தனர். பின்னர் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தனர். வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வருஷாபிஷேக விழா
சோழவந்தான் வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சமூகத்தார்களுக்கு பாத்தியப்பட்ட தொட்டிச்சிஅம்மன் கோவில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொட்டிச்சி அம்மன், வலம்புரி விநாயகர், சப்பாணி கருப்புசாமி உள்பட பரிகார தெய்வங்களுக்கு 12 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, பூஜை நடந்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






