குலசை தசரா: விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா


குலசை தசரா: விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 5 Oct 2024 7:39 AM IST (Updated: 5 Oct 2024 7:46 AM IST)
t-max-icont-min-icon

குலசை தசரா திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க 10.32 மணிக்கு பட்டர் குமார் கொடிமரத்தில் கொடியேற்றினார்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள்'ஓம் காளி, ஜெய் காளி' என பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கொடி மரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீர், குங்குமம், இளநீர், புனித நீர் உள்பட பல்வேறு வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் பூசாரிகள் காப்பு கட்டினார்கள்.

அதனை தொடர்ந்து முதல் திருவிழா அன்று இரவு 10 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இந்நிலையில், 2ம் நாள் திருவிழாவான நேற்று அம்மனுக்கு காலை 8 மணி, 10.30 மணி, பகல் 12 மணி, 1.30 மணி, 2.30 மணி, மாலை 4.30 மணி, 6.30 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து அம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தசரா திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story