நாளை கூடாரவல்லி விழா: பெண்களின் மன விருப்பத்தை நிறைவேற்றும் ஆண்டாள்
கூடாரவல்லி நாளில் திருப்பாவையின் 27-வது பாடலை பாடுவதுடன், அக்காரவடிசல் செய்து, இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கலாம்.
ஆண்டாள் நாச்சியார் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக்கொண்டு, கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் லட்சியமாக எண்ணி திருப்பாவையை பாடியுள்ளார். திருப்பாவையின் முதல் ஐந்து பாடல்களின் வாயிலாக நோன்பு இருப்பதன் மாண்பைப் பற்றி சொல்கிறார். அடுத்துவரும் 6 முதல் 15 வரையான பாடல்களில் கண்ணனின் லீலைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். அதோடு அறியாமையில் மூழ்கி உறங்கிக்கொண்டிருக்கும் ஆயர்குல பெண்களையும், மானிடர்களையும் விழித்தெழப் பாடுகிறார். 16 முதல் 25-ம் பாசுரம் வரை, கண்ணனின் மாளிகையிலும், அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் அருளைப் பெறும் விதமாக இருக்கிறது. 26-வது பாடலில் கண்ணனை நேரடியாக அழைத்து, ஆயர்குல பெண்கள் நோன்பு இருக்க தேவையானவற்றை பரிசாக அளிக்கும்படி கேட்கிறார்.
அடுத்து வரும் 'கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா'என தொடங்கும் 27-வது பாடலில், கண்ணன் எப்படியும் தனக்கு பேரருளை தருவான் என்ற நம்பிக்கையில், அவன் கையைப் பிடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கண்ணன் தன்னை கைப்பிடிக்கும் சமயத்தில் அவனின் அழகுக்கு நிகராக தானும் ஓரளவேனும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக மணம் கமழும் மலர் சூட்டி, சில ஆபரணங்களை அணிந்து தன்னை அழகுபடுத்திக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் அரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும், வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக கள்ளழகரிடம், ஆண்டாள் நாச்சியார் வேண்டிக்கொள்கிறாள்.
அவர் நினைத்தபடியே அரங்கநாதருடன் கைகோர்த்த ஆண்டாள் நாச்சியார், அரங்கனுடன் ஐக்கியமாகி விட்டார். ஆனால் கள்ளழகருக்கு அவர் சமர்ப்பிப்பதாக கூறிய அக்காரவடிசலும், வெண்ணெயும் சமர்ப்பிக்கப்படாமலேயே இருந்தது. அந்த நேர்த்திக்கடனை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ராமானுஜர் நிறைவேற்றினார். கள்ளழகருக்கு நூறு அண்டாக்களில் அக்காரவடிசலையும், வெண்ணெயையும் சமர்ப்பித்தார்.
திருப்பாவையின் 27-ம் பாசுரத்தில் 'பால் சோறு மூட நெய் பெய்து..' என்று இருப்பதால், அக்காரவடிசலான பால்சோறு, நூறு அண்டாக்களில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.
இது பிற்காலத்தில் பிற வைணவ ஆலயங்களிலும் செய்யும் ஒரு நடைமுறை வழக்கமாக மாறிப்போனது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், கள்ளழகர் ஆலயங்களில் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த வைபவத்தின் போது, 120 லிட்டர் பால், 250 கிலோ அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து, பலமணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் கள்ளழகருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
திருப்பாவை – 27
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
திருப்பாவையின் இந்த பாடலை, அதற்குரிய மார்கழி 27-ம் தேதி, பக்தா்கள் தங்கள் இல்லங்களிலும், அருகில் உள்ள கோவில்களிலும் பாடலாம். பால்சோறு எனப்படும் அக்காரவடிசல் செய்து, இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து, அக்கம் பக்கத்தினர் அனைவருக்கும் பகிர்ந்து உண்ணலாம்.
கூடாரவல்லி தினம் என்பது கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக, ஆண்டாள் உறுதியாக நம்பிய நன்னாள். ஜீவாத்மா- பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொள்வது உறுதி என்பதை நிரூபித்த நிகழ்வு தினம் இது. அவ்வகையில், இந்த ஆண்டு கூடாரவல்லி விழா நாளை (11-1-2025) நடைபெறுகிறது.
இந்த நாளில் பெண்கள் புத்தாடை அணிந்து கொள்வதும், அணிகலன்கள் பூட்டிக்கொள்வதும் வாழ்வில் ஒளியேற்றும். ஆண்டாளின் மன விருப்பத்தை, அரங்கநாதர் வந்து நிறைவேற்றிக் கொடுத்ததுபோல, இந்த நாளில் வேண்டிக்கொள்ளும் பெண்களின் மனவிருப்பத்தை, ஆண்டாளே நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை.