ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேரோட்டம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சந்திர சூடேஸ்வரர் ஒரு தேரிலும், மரகதாம்பிகை ஒரு தேரிலும், விநாயகர் ஒரு தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி பவனி வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மலைக்கோவில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த (பிப்ரவரி) மாதம் 10-ந் தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால் கம்பம் நடப்பட்டு தேர் கட்டும் பணியுடன் தொடங்கியது. ஓசூர் தேர்பேட்டையில் உள்ள தேர்களை கட்டி அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. கடந்த 7-ம் தேதி காலையில் கோவிலில் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் கொடியேற்றம் நடைபெற்றது.
அதன் பின், மலை மீதிருந்து உற்சவ மூர்த்திகள் தேர்பேட்டை கல்யாண சூடேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினர். அங்கு தினமும் வாகன சேவை, சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று இரவு கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர சாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சந்திர சூடேஸ்வரர் ஒரு தேரிலும், மரகதாம்பிகை ஒரு தேரிலும், விநாயகர் ஒரு தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி பவனி வந்தனர். தேர் வலம் வந்தபோது பக்தர்கள் தேரின் மீது உப்பு, பழம், மிளகு போன்றவற்றை தூவி வழிபட்டனர். தமிழகம், கர்நாடகம், ஆந்திரா என 3 மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை (சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கைகளுடன் விடிய, விடிய ராவண உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் (சார் ஆட்சியர் அலுவலகம், ஓசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லூரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.