லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான்... விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
திருச்செந்தூர்,
கந்தசஷ்டி விழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழாவாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள்.
விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜை, யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் சுவாமி-அம்பாள்களுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோலாகலமாக தொடங்கிய சூரசம்ஹார நிகழ்ச்சி
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. முருகப் பெருமானான சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காக வென்பட்டு உடுத்தி, வெட்டிவேர் மயில் தோகை மாலை அணிந்து கடற்கரைக்கு வருகை தந்தார்.
முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகம் கொண்ட தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக, அவரை மூன்றுமுறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிராக நின்றான். 4.54 மணிக்கு முருகபெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.
அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்றுமுறை சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். 5.09 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் சம்ஹாரம் செய்தார்.
தொடர்ந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வந்தான். தொடர்ந்து 5.22 மணிக்கு முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்து கொண்டார்.
கடற்கரையில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்
சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். கந்த சஷ்டி விழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள், திருச்செந்தூரில் தங்களது விரதத்தை நிறைவுசெய்தனர். சூரசம்ஹாரம் நிகழ்ந்தபோது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா' போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. 4,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.