நவக்கிரக பாதிப்பா..? வேப்பெண்ணெய் தீபம் ஏற்றி காளியம்மனை வழிபடுங்கள்..!
நவக்கிரகங்களின் பாதிப்பால் ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு காளியம்மன் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் நவக்கிரகங்களின் அமைப்பு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த நவக்கிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றாற்போல் வாழ்க்கையும் அமையும். இந்த நவக்கிரகங்களின் அமைப்பு ஏற்படுவதற்கு கர்மவினை தான் முக்கிய காரணமாக திகழ்கிறது. கர்ம வினைகளை நீக்குவதற்கும், அதே சமயம் நவக்கிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைவதற்கும் காளியம்மனை வழிபடலாம்.
செவ்வாய்க்கிழமைகளில் காளியம்மன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கேற்ற மூன்று அகல் விளக்குகளை வாங்கிக்கொள்ளவேண்டும். தீபம் ஏற்றுவதற்கு வேப்ப எண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல் மஞ்சள் நிற காட்டன் துணியையும் வாங்கி வைக்கவேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அந்த பாத்திரத்தை இறக்கி வைத்து வாங்கிவைத்திருக்கும் மஞ்சள் துணியை அதில் மூழ்கும்படி வைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து காய வைத்து எடுக்க வேண்டும். பிறகு சுத்தமான பன்னீரில் நனைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த துணியில் தான் திரியை தயார் செய்து தீபம் ஏற்ற வேண்டும். எவ்வளவு பெரிய திரி வேண்டுமோ அவ்வளவு பெரியதாக அதை வெட்டி திரியாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதேபோல் தங்க அரளிப் பூவை பறித்து மாலையாக தொடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
காளியம்மன் கோவிலுக்கு சென்று தங்க அரளிப்பூ மாலையை அம்மனுக்கு சாற்ற சொல்லி கொடுத்துவிடவேண்டும். அம்மனுக்கு முன்பாக மூன்று விளக்குகளை வைத்து அதில் வேப்ப எண்ணெய்யை ஊற்றி, தயார் செய்துவைத்திருக்கும் திரிகளை போட்டு மூன்று திரிகளும் ஒன்றாக இருப்பது போல் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து 18 வாரங்கள் தீபம் ஏற்றி காளியம்மனை வழிபட, ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவக்கிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய ஆரம்பிக்கும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமான காளியம்மனை வேண்டி, முழு மனதுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.