அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம்

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அதுமட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று இறைவனை வழிபட்டனர். இதனால் கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்கள் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






