திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 கி.மீ. தூரம் காத்திருந்து தரிசனம்
பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர விழாவான மகா தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் கண்டனர்.
தொடர்ந்து மாலையில் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மோட்ச தீபம் எனப்படும் மகாதீபத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம். கோவிலில் உள்ள நவ கோபுரங்கள் உட்பட திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் அகல் விளக்கேற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்தனர். கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் 14 கி.மீ. கிரிவலம் சென்று, சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.