காசிக்கு நிகரான தலம்.. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில்


திருவெண்காடு ஆலயத்தில் ஒவ்வொரு யுகத்திலும் பூஜைகள் செய்து பலர் ஞானத்தை அடைந்ததாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலத்தின் சிறப்புகளை பற்றி அப்பர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர். இத்தலத்தில் இறைவனாக சுவேதாரண்யேஸ்வரரும், இறைவியாக பிரம்ம வித்யாம்பிகை அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

பிரளய காலத்திலும் அழியாமல் சிவபெருமானது சூலாயுதத்தால் தாங்கப்பெற்ற தலமாக இத்தலம் விளங்குகிறது. நான்கு வேதங்களை இயற்றிய வியாச முனிவரின் ஸ்கந்த மகாபுராணத்திலும், அருணாச்சல புராணம், செவந்திப்புராணம், திருவிருஞ்சைப்புராணம், திருவருணைக்கலம்பகம், திருவருணைஅந்தாதி ஆகிய புராணங்களிலும் இத்தலத்தின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

தலபுராணம்

ஜலந்தராசுரனுடைய மகன் மருத்துவன் என்ற அசுரன், சிவனை நினைத்து தவமிருந்தான். அந்த தவத்தின் பலனாக, ஈசனிடம் இருந்து சூலாயுதத்தை வரமாக பெற்றான். இதையடுத்து தேவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்தான். ஆதலால் தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியை மருத்துவாசுரனிடம் அனுப்பினார்.

மருத்துவாசுரன், சிவபெருமானிடம் இருந்து வரமாக பெற்ற சூலாயுதத்தைக் கொண்டு நந்தியை தாக்கி 9 இடங்களில் காயப்படுத்தினான். (இன்றளவும் இந்த ஆலயத்தில் உள்ள நந்தியிடம் இந்தக் காயங்களை காணலாம்)

நந்தி காயம் அடைந்ததை அறிந்த சிவபெருமான் சினம்கொண்டார். அவரது சினம் அவரை அகோர மூர்த்தியாக உருவெடுக்கச் செய்தது. இந்த அகோர மூர்த்தி உருவத்தை அவர், மாசி மாதம் தேய்பிறை பிரதமை பூர நட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு எடுத்தார்.

கரிய திருமேனியுடன், செவ்வாடை உடுத்தி, இடது காலை முன் வைத்து, வலது கால் கட்டை விரலையும், அடுத்த விரலையும் ஊன்றி நடைகோலமாக காட்சிஅளித்தார். எட்டு கரங்களும், அதில் ஏழு ஆயுதங்களும் தாங்கி கம்பீர போர்க்கோலத்துடன் தோன்றினார். மேலும் எரிசிகையுடன், கைகளில் மணி, கேடயம், கத்தி, வேதாளம், உடுக்கை, கபாலம், திரிசூலம் ஆயுதங்களுடன், கோரைப் பற்களுடன் 14 பாம்புகளை தன் மேல் உடுத்தி, மணிமாலை அணிந்து, அஷ்ட (எட்டு) பைரவர்களுடன் புன்னகை முகத்துடன் தனது ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் இருந்தார். இதனால் அவர் அகோர மூர்த்தி என்று அழைக்கப்பட்டார்.

இவரது தோற்றத்தை பார்த்த உடனே மருத்துவாசுரன், அகோரமூர்த்தியின் திருவடியில் சரணடைந்தான். தொடர்ந்து மருத்துவாசுரன், அகோரமூர்த்தியிடம் 'உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நவக்கிரக தோஷம், பித்ருதோஷம் மற்றும் எம பயத்தை போக்கி, வாழ்வில் செழிப்பு, ஆரோக்கிய வாழ்வு உள்பட அனைத்து செல்வங்களையும் வழங்க வேண்டும்' என வேண்டுகிறான். உடனே அகோரமூர்த்தி, மருத்துவாசுரன் வேண்டிய வரத்தை அருளுகிறார்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற அகோரமூர்த்திக்கு ஞாயிறுதோறும் இரவு அகோரபூஜையும், மாதந்தோறும் பூர நட்சத்திரத்தில் அகோரமூர்த்தி பூஜையும் நடைபெறுகிறது. அதேபோல கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக கார்த்திகை 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பூஜைகள் சகலவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்தி படைத்தது என்பது ஐதீகம்.

தல சிறப்புகள்

இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காசிக்கு சமமான ஆறு தலங்களில் இத்தலமும் ஒன்று. இத்தலம் நவக் கிரகங்களில் புதன் ஸ்தலமாக போற்றப்படுகிறது. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்ததால் இத்தலத்தை ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு யுகத்திலும் பூஜைகள் செய்து பலர் ஞானத்தை அடைந்ததாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது. கிருத யுகத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும் பூஜித்து ஆத்ம ஞானம் பெற்றார்கள். திரேதாயுகத்தில் சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் பூஜித்து பூவுலகிற்கு நாமெல்லாம் தரிசிக்கும் தெய்வமாக விளங்குகிறார்கள். துவாபர யுகத்தில் லட்சுமி பூஜை செய்து மகா விஷ்ணுவை அடைந்தாள். தற்போது நடைபெறும் கலியுகத்தின் தொடக்கத்தில் விநாயகர், முருகன் ஆகியோர் பூஜை செய்து ஆத்ம ஞானத்தை பெற்றுள்ளனர். இத்தலத்தின் வில்வ மரத்தை பூஜித்து பிரம்மா, விஷ்ணு, எமன், வருணன், காளி, குபேரன் ஆகியோர் ஆத்ம ஞானம் பெற்றார்கள்.

புதன் தனது அலி தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றார். அதன் காரணமாக நவக்கிரக பதவி அடைந்தார். இங்கு தனி சன்னிதியில் புதன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். புலிப்பாணி சித்தர் பூஜை செய்து தனக்கு ஏற்பட்ட தீராத நோயை தீர்த்துக் கொண்டார். மகாவிஷ்ணு பூஜை செய்து சுதர்சன சக்கரம் பெற்றார்.

இத்தலத்தில் உள்ள இறைவியின் நாமம் பிரம்மவித்யாம்பாள் என்பதாகும். மாதங்க முனிவருக்கு மகளாக தோன்றி மாதங்கி என்ற பெயருடன் வளர்ந்து வந்த அன்னை, சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து கணவனாக பெற்றதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகை என அழைக்கப்படுகிறார்.

நவக்கிரகங்களில் புதன் பகவான் கல்வி அறிவு, பேச்சுத்திறமை உள்பட சகல செல்வங்களையும் வாரி வழங்குவதாக ஐதீகம். பல்வேறு சிறப்புகளை பெற்ற புதனுக்கு இத்தலத்தில் தனி சன்னிதி உள்ளது. வித்யாகரன் எனப்படும் புதன் தன் அலி தோஷம் நீங்கி, நவக்கோள்களில் ஒருவர் ஆனார் என்பது புராண வரலாறு. இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.

பல்வேறு சிறப்புகளை பெற்ற அகோர மூர்த்திக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றாலும், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை அதிலும் குறிப்பாக கார்த்திகை 3வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு.

அமைவிடம்

இத்தலம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

குழந்தை வரம் அருளும் பிள்ளையிடுக்கி அம்மன்

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, திருத்தலத்தின் தரைகள் முழுவதும் சிவலிங்கங்களாக காட்சி அளித்தன. எனவே இத்தலத்தில் கால் வைக்க பயந்து தயக்கத்துடன் 'எப்படி நான் இத்தலத்திற்கு செல்வேன்!' என சிவனை கூப்பிடுகிறார். திருஞானசம்பந்தர், சிவபெருமானை அழைத்தது இந்த தலத்தின் அருகில் உள்ள ஒரு குளத்தின் பக்கத்தின் நின்றுதான். எனவே அந்தக் குளம், 'கூப்பிட்டான் குளம்' என்ற பெயரில் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.

திருஞானசம்பந்தரின் அபயகுரலை கேட்ட சிவபெருமான், பார்வதியை அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வரும்படி கூறினார். சிவனின் ஆணைக்கிணங்க பார்வதி தேவி, திருஞானசம்பந்தரை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் வந்தார். ஆதலால் பிள்ளையிடுக்கி அம்மன் என்ற திருநாமம் பெற்றார். இந்த அம்மன் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களிலும் நீராடி பிள்ளையிடுக்கி அம்மனை வழிபட்டால், எளிதில் குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி இன்றளவும் பக்தர்கள் 3 தீர்த்தங்களிலும் நீராடி, மனமுருகி இந்த அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டு குழந்தைப்பேறு பெறுகின்றனர்.


Next Story