நாளை மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்ட திருவாபரண ஊர்வலம்
மகரவிளக்கு பூஜைக்காக பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் தொடங்கியது.
திருவனந்தபுரம்,
பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் நடை திறக்கப்பட்டது. தினசரி சாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அப்போது அய்யப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
இந்த திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை நேற்று பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டது. முன்னதாக சாஸ்தா கோவிலில் மதியம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் திருவாபரணங்கள் 3 சந்தன பேழைகளில் எடுக்கப்பட்டு பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி திருக்கோட்ட நாள் ராஜ ராஜ வர்மா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை 6.25-க்கு அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, பொன்னம்மபல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இதையொட்டி, எருமேலியில் நேற்று முன் தினம் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெற்றது. அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் நாளை சந்நிதானத்தை வந்தடையும். இந்த ஊர்வலத்துக்கு சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்.
சந்நிதானம் வரும் திருவாபரணத்தை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி ஆகியோர் பெற்றுக் கொள்வர். மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டவுடன், பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனம் நடைபெறும். இதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மேலும், அட்டதோடு முதல் நீலிமலை வரையிலான பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. பம்பை நுணங்கானுக்கு இடையே தற்காலிக பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. நெரிசலைத் தவிர்க்க வரும் இன்று மற்றும் நாளை ஆன்லைன் மூலம் தலா 50 ஆயிரம் பக்தர்கள், ஸ்பாட் புக்கிங் மூலம் 1,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகரஜோதி நாளில் புல்மேட்டில் நெரிசல் ஏற்படும் என்பதால், இடுக்கி மாவட்டத்துடன் இணைந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அய்யப்ப சந்நிதானத்தில் நேற்றும், இன்றும் சுத்திகிரியை பூஜை நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையில் அணிவிக்கப்படும் திருவாபரணத்துடன் அய்யப்பனை நாளை (14-ம் தேதி) முதல் 18-ம் தேதி வரை தரிசிக்கலாம்.
வரும் 19-ம் தேதி வரை சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும் 20-ம் தேதி காலை 6.30 மணிக்கு பந்தள ராஜ குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்த பின்னர், கோவில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நிறைவடையும்.