சேர்த்தலை கார்த்தியாயினி தேவி ஆலயம்

தேவி குளத்தில் குதித்ததை அடிப்படையாகக் கொண்டு கார்த்தியாயினி ஆலய திருவிழா நாட்களில் குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
கேரளாவில் உள்ள 108 அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது சேர்த்தலை கார்த்தியாயினி தேவி ஆலயம். பரசுராமர் கேரளாவை உருவாக்கியபோது இங்கே துர்க்காதேவியை வணங்குவதற்காக ஆலயம் எழுப்பியதாகக் கூறுகிறார்கள்.
தல வரலாறு
வில்வமங்கலம் சுவாமிகள் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமியை தரிசித்துவிட்டு திரும்பும்போது, தற்போது அம்மன் அருள்பாலிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிலுக்கு வந்தார். அப்போது அந்த இடம் காடாக இருந்தது. அங்கு சிறிய அளவில் தேவி கோவில் காணப்பட்டது. ஆனால் கோவிலின் உள்ளே தேவியைக் காணவில்லை.
இதனால் அதிர்ந்த வில்வமங்கலம் சுவாமிகள், மக்களைக் காக்கும் தேவி எங்கே போனாள்? என்பதை தன்னுடைய ஞானதிருஷ்டியால் தேடினார். அப்போது, அழகான பெண்ணுருவம் எடுத்து நகைகளுடன் பட்டாடை அணிந்து சற்றுத் தொலைவில் தம்பக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஊஞ்சலாடி கொண்டிருந்தாள். இதைப் பார்த்த சுவாமிகளுக்கு கோபம் ஏற்பட்டது. தன்னுடைய கடமையில் இருந்து தேவி விலகி நிற்பதா? அவளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என முடிவு செய்த வில்வமங்கலம் சுவாமிகள் தேவி ஊஞ்சலாடும் இடத்துக்குச் சென்றார்.
சுவாமிகளைக் கண்டதும், சுவாமியுடன் கொஞ்சம் விளையாடுவோமே என நினைத்த தேவி, ஊஞ்சலிலிருந்து எழுந்து ஓடினார். சுவாமியும் தேவியை விடாமல் துரத்தினார். இறுதியாக தேவி அருகிலுள்ள குளத்தில் குதித்தாள். தேவி கரைக்கு வருவார் என்று சுவாமி காத்திருந்தார். ஆனால், தேவி குளத்திலிருந்து எழுந்து, சுவாமியைக் கண்டதும் மறைவதுமாக இருந்தார். இப்படி ஏழு நாட்கள் ஏழு குளத்தில் மூழ்கி சுவாமிகளின் கண்களில் படுவதும், மறைவதுமாய் தேவி இருந்தாள்.
கடைசியாக எட்டாவது நாளில் அவள் குதித்த குளம்தான் தற்போது கோவில் இருக்கும் இடம். உபயோகமற்ற அந்த குளம் சேறும் சகதியுமாக இருந்தது. இருந்தாலும் தேவி அந்த குளத்தில் குதித்தாள். தேவியின் உடல் சேற்றில் தாழ்ந்து கொள்ளும்போது, வில்வமங்கலம் சுவாமிகள் கோபத்துடன் தேவியின் தலைமுடியைப் பிடித்துக்கொண்டார். இதையடுத்து தேவி, சுவாமிகளுக்கு தன்னுடையை விஸ்வரூப தரிசனத்தை காட்டி அருளினார். சேற்றில் மூழ்கிய தேவியின் தலைமட்டுமே வெளியே தெரியும்படியாக இருந்ததால் இவ்வூர் ‘சேர்த்தலை’ எனப் பெயர் பெற்றது.
கோவிலில் தேவியின் தலைப்பாகம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி குளத்தில் குதித்ததை அடிப்படையாகக் கொண்டு திருவிழா நாட்களில் குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. வில்வமங்கலம் சுவாமிகளிடம் பிடிபடாமல் பலநாட்கள் அவரைக் காக்க வைத்ததால் சுவாமிகள் கோபித்துக்கொண்டு தேவியைத் திட்டினார். இதனால் இன்றும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவின் போது, பூரப்பாட்டு நடக்கும்போது தேவியை திட்டிக்கொண்டு பாடுவார்கள்.
கோவில் அமைப்பு
கோவில், கேரள கட்டிடப்பாணியில் காணப்படுகிறது. வெளிப்பிரகாரத்தின் முன்பு தங்கக் கொடிமரம் ஜொலிக்கிறது. அதை அடுத்துள்ள மண்டபத்தைக் கடந்தால் கர்ப்பக்கிரகம் உள்ளது. இக்கோவில் வெளிப்பிரகாரம் தரைமட்டத்தில் இருந்தாலும் கருவறை தரைமட்டத்தில் இருந்து தாழ்ந்து காணப்படுகிறது.
பொதுவாக எந்த கோவிலிலும் மூலஸ்தானத்தில் சுவாமி உயர்ந்துதான் காணப்படுவார். ஆனால் இங்கு, சேற்றில் தேவியின் தலைமட்டும் தெரிந்ததால் அதே இடத்தில் அப்படியே சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். விக்ரகத்தில் தங்கத்தினால் ஆன கவசம் அணிந்துள்ளனர். சுமார் இரண்டு அடி கீழே தேவியின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொன்னில் ஜொலிக்கும் தேவியைக் கண்குளிர வணங்கமுடியும். அதுவும் குனிந்துதான் தேவியை வணங்கமுடியும்.
தேவியின் சிலையின் தலைப்பாகத்தில் நிறைய ஓட்டைகள் உண்டு. சுவாமிகள், தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்தபோது, அந்த முடியின் சில பாகம் அப்படியே சுவாமிகளின் கையில் வந்து விட்டது. இதனால் தேவியின் தலையில் சிறுதுவாரங்கள் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அபிஷேகம் நடக்கும்போது இந்த துவாரங்களில் தண்ணீர் தேங்கும். இதை பூசாரி துணியால் துடைத்து எடுப்பார். பூக்களால் புஷ்பார்ச்சனை நடத்தும்போது, இந்த துவாரங்களில் துணியால் மூடிவிட்டுதான் புஷ்பார்ச்சனை செய்வர்.
சேவல் பறக்கவிடுதல்
சேர்த்தலை கோவிலின் அனைத்து பகுதிகளிலும் சேவல்கள் இருப்பதை காணமுடியும். இவை பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டவையாகும். தங்களுடைய பிரார்த்தனை எதுவானாலும் அவற்றை நிறைவேற்ற ‘‘கோழி பறக்கவிடுதல்’’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். கோவில் அலுவலகத்தில் 101 ரூபாயை செலுத்தி, கோவிலில் நிற்கும் ஒரு கோழியைப் பிடித்து கோவில் கொடிமரம் முன்பு வந்து கோவிலை நோக்கி பறக்க விடுகிறார்கள்.
கோவிலின் தெற்குப்பகுதியில் காவுடையான் சன்னிதி உள்ளது. பங்குனி மாதம் எட்டு நாட்கள் ஆறாட்டு விழா நடைபெறும். ஆறாட்டு முடிந்து திரும்பும்போது தேவி, காவுடையன் சன்னிதிக்கு பின்வழியாகவே மேளதாளமின்றி கொண்டு செல்லப்படுகிறாள்.
இங்கு தேவிக்கு இரட்டியும், காவுடையானுக்கு தடியும் நைவேத்தியமாக படைக்கிறார்கள். இங்கு இனிப்பான பாயாசத்தைத்தான் ‘இரட்டி’ என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். அரிசிமாவு, வெல்லம், தேங்காய், கதலிப்பழம், நெய், முந்திரி, சுக்கு, சீரகம் போன்றவற்றால் தயாரிக்கப்படுவது ‘தடி’ என்றழைக்கப்படுகிறது.
எந்தவித பிரார்த்தனையாக இருந்தாலும் அதை சேர்த்தலை கார்த்தியாயினி தேவி நிறைவேற்றித் தருவாள் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே காணப்படுகிறது. கோவில், காலை 5 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
எர்ணாகுளத்தில் இருந்து ஆலப்புழை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் சேர்த்தலை பஸ், ரெயில் நிலையம் அருகில் இக்கோவில் உள்ளது.






